Saturday, July 25, 2009
நெடு நீண்ட ஆண்டுகளாகவே...
விழிகள் இறுக்க மூடுகின்றோம்
விடிந்ததும் திறக்குமென்ற
அர்த்தமற்ற நம்பிக்கையினிலே...
ஈரம் படிந்த கண்கள்
பஞ்சடைத்த காதுகள்
இஷ்டதெய்வத்தை கூப்பி கூப்பி
ஒடிந்துபோன கைகள்
கனவுகளும் விரோதமாகவே...
சூரியன் எழுப்புதோ என்னவோ
வெடிகுண்டுகளின் வெளிச்சம்
முகத்தில் அறைந்து...
ஆச்சரியம் - காலை !!!
வெற்று விடியல் ???
பின்பு அது
முற்றத்தில் தெரிக்குமோ
கொல்லையில் சிதறுமோ
நிசப்தமற்ற நிழல்களாய்
பொழுதுகள் நகர்கிறது...
பச்சை குழந்தைக்கு
பால்பசி எடுத்தால்
தெருவோரம் தேடியோடுகிறோம்
வெடிகுண்டு விழுங்கிசென்ற
குருதிகாயாத முலைகளை...
கடைசியில் பொறுமைகொன்று
திங்க... தூங்க... வழியற்று
ஒற்றை மூட்டையில்
மொத்த வீட்டையும் அடைத்துவிட்டு
புறப்படுகின்றோம் பயணம்...
புதிய மண்ணின் வாசனை
இருகரம் தாங்கி
விழிகள் கசிந்து
நூறுகோடி வேதனையோடு...
........................................................
அன்புடன் வாசிப்புபலகை
வரவேற்கிறது எங்களை
அகதிகள் முகாம்..................................
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment