20.
விடுமுறையின் தாகம்
கானலில் ஒளிரும் உனது கையசைவில்,
கம்பி வேலிக்குள் தவறிப் புகுந்த பறவையின் சிறகுகளையே
வெகு நேரம் உணர்ந்து கொண்டிருக்கிறேன்
***
21.
மழை பெய்யும் கானலாய்
இந்நிலம்
எங்கும் உருளும் வெயில் நதியில்
உன் வழியனுப்பிய முகம்
ஏந்தி நிற்கிறது தீபமாய்
***
22.
வெயில் புரண்டோடும் மண்
கொணர்ந்தப் பிரிவுதனை
பூனையாய்க் கழுவுகிறேன்
நேசம் மருகி நேசம் பெருகி
தெப்பக்குளத்தில் கால் கடிக்கும் சிறு மீனாய்
துள்ளும் நினைவலைகளில்
பிரிய முகத்தின் ஈர சுவாசம்
பெரு நிலவாய்
***
23.
பரிசாய் நீ செருகிய
மறந்துவிட முடியாததொரு முத்தத்தை
இரண்டரை மணி நேரத்திற்கு அப்பாலிருந்து
நேசிக்க நேசிக்க நேசித்துக் கொண்டிருக்கிறேன்
திருவிழா ஆரவாரமாய்
மணற்காற்றெங்கும் ஏங்கிப் பொழிகிறது
அன்பின் சொற்கள் அன்பின் அன்பாக
கானல்நீர் என் திசைஅறுந்து செல்கிறது
உனது குரலை எந்தன் இசையில்
செவியாறப் பருகி
***
24.
தனியனாய்
எப்படிக் கடப்பேன்
இப்-பெரும்பாலையை
தினம் தினம் நான்
பள்ளியிலிருந்து வீடு செல்கையில்
நனைந்தோடிய மழையாய் ஞாபகமிருக்கிறது
உன்னை என்கிறாயே
***
25.
நடக்க கற்றுக் கொண்டிருக்கிறேன்
மனம் பிசையும் வல்லாத அன்பினிடத்து
கால்களை இரைந்துவிட்டு
வாஞ்சையோடு பற்றிக் கொள்ள
காத்திருக்கும்
ஒரு மலையடிவார நதியினை
விரல்களில் அள்ளிக் கொண்டு
கண் எட்டாத் தொலைவு கடந்திருப்பாய் நீ
எப்பொழுதோ
சந்திக்கும் தருணம் சொல் மறந்துவிடாது
உனக்கு முன் அடைந்திருந்த
எனது நட்சத்திரக்கண்களிடம் பிரிவின் வாதையை
***
நன்றி மலைகள்.காம்
1 comment:
வரிகளைப் போல படமும் சூப்பர்ப்...
Post a Comment