Friday, July 30, 2010

அரேபிய ராசாக்கள் - பிரிவு அறிவித்தல்..




நிசப்தத்தின் நிசப்தம்..!

அன்று நான் வழியனுப்பப் பட்டேன்.. அதனை, டாட்டா காட்டி அனுப்பினார்கள் என்றுகூட பிள்ளைத் தமிழில் சொல்லலாம்.. உயர உயர பறக்கப் பறக்க.. என்னை, என் இயல்வாழ்வைத் தாழ்த்திக் கொண்டிருந்தது விமானம்.. இதுதான் ஒரு ஆழ்ந்த நம்பும்படியான பொய் என்பேன் பிற்பொழுதில் அரேபியக்கதை கேட்கும் பாரபட்சமற்ற யாவரிடமும்..


ஆகும் நொடியில், வெயில் அடித்து மழை ஓய்ந்த மனநிலையில், இப்பெரும் அரேபியாவின் கொடுமணல் குன்றின் மீது ஒருநாளைக் கடக்கும் ஒவ்வொரு நொடியையும் கடத்திக் கொண்டிருக்கிறேன்..


பணியெடுக்கும் ஒட்டகப் பாலையில், என்றோ அன்று வெறுமையின் அர்த்தம் தாங்காது, கொதி வெயிலில் நனைந்த பைப்பின் மீது வெல்டிங் ராட் உபயோகப்படுத்தி கிறுக்கிய என் பெயருடன் கூடிய நண்பர்கள் இனிசியலை.. கண்டு கொண்டிருக்கும் வானத்தை தீர்க்குமுன், ஒரே ஒருமுறை கண் ஒத்தியெடுக்கவல்லாத ஆசையோடு ஞாபகங்கள் மருகுகிறது கசக்கிப் பிசைந்து இதயக் கூட்டினை..


எழுதுவதை நிறுத்திவிட்டுப் பார்க்கிறேன்.. உயிர் உருக உருக உருகுவதை..!


யானைப்பாகன் பழக்கி வைத்திருக்கும் ஒரு யானையைப் போன்று சொன்னதைச் செய்யும் மனமாக இருந்த மனசு, சொல்லச் சொல்லக் கேட்காது அடம்பிடிக்கும் மழலைப் பிள்ளையாக.. என் செய்வேன் என்னை ??


மொழிப் பெயர்த்தலும் மௌனச் சொல்லாக உருப்பெயர்வதை, எந்தப் பூட்டுக் கொண்டும் அடைக்க துணிவற்று.. செத்து செத்துப் பயில்கிறது இதுவன்றோ என்னை நான் இருத்திக் கொண்ட இருத்தலென..!


மிகுப் பேரமைதியாக சொல்லப்போனால், தாயை விட்டுப் பிரிந்த வளர்பறவைக்கு உயிர்வாழ எது தேவையென சுலபத்தில் பிரித்தறியாத் தருணம் போல அவிழ்க்கிறேன் என்னை என்னிலிருந்து..!


கடந்துபோன நானூற்று எழுபத்தைந்து நாட்களில் இல்லாத வெறுமை அறையெங்கும்.. இம்மண்ணை விட்டு நகர்ந்தாலும் ஒரு போதும் தீரா வாசமாகத்தான் இருக்கப் போகிறது அரேபிய ஞாபகங்கள் மனசின் அழியாப் பாகங்களில்.. நிஜம் இதுவோ அல்லது வெறும் பிரம்மையோ! என்னை நானே கேட்டுக் கொள்ளத் தவிக்கிறேன்.. பிறகு தவிர்க்கிறேன்.. இந்த நிசப்தத்தின் நிசப்தம் அலுவலகத்தின் கடைசிக் கணக்கு முடித்தலின் பேரமைதியைக் காட்டிலும் அதிக வலியோடு அமிழ்கிறது..

கொப்பளித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு கேள்வி உயிர்ப்பெறுகிறது.. நான் மட்டும்தான் பைத்தியக்காரனா இல்லை என்னை மட்டும்தான் இப்பைத்தியம் பிடித்து ஆட்டுகிறதா?? சமயங்களில், சிறு குழந்தைகள் அம்மாவின் தீட்டுப்பற்றி தெரிந்துகொள்ள விருப்பப் படுவதைப் போலொரு சூழலோ யென்று.. கேள்விக்கு கேள்வி கொண்டே பதிலும் சொல்லப் பிரியப் படுபவனாகிறேன்..!


ஒரு முழுநாளின் நொடிகள் மிதம் மிஞ்சித் தீரும் பொழுதுதனில் தாள தாளப் பறக்கும் விமானத்தில் நான் உயர உயர பறப்பேனோ..? நம்பிக்கையின் கீற்று நட்சத்திரங்களைவிட பிரகாசமாக.. அது போதும் அது மட்டுமே போதுமெனக்கு.. கூச்சமென்ன வேண்டிக் கிடக்கு கூச்சம்.. எழுது, இன்னும் எழுது எழுதென்று பின்தொடரும் நிழலின் ஒலி சன்னமாகக் கேட்பதை உணர முடிகிறது..


முன்பு இதே மாதிரியான, என்னைப் போன்றே.. விலாசம் இடாது கடிதம் எழுதி, எழுதிக் கிழித்திருக்கிராறாம் அவர்.. அப்படி என்னப் பெரிதாக முடித்திருக்கிறேன் , வெறும்..வெறும்.. நானூற்று எழுபத்தைந்தே நாட்கள் , அதுவும் திருமணம் முடிக்காத இளைஞன்.. எதிர் அறை நண்பருக்கோ என்னைப் போலொரு மகன், என் தங்கையைப் போலொரு மகள்.. என்னைப் போன்றே விலாசம் இடாது கடிதம் எழுதி பல நான்கு முறை எழுதிக் கிழித்தாராம்.. எரிசாராயத்தின் உச்ச போதையிலும் பகிர்ந்து கொண்டே படுக்கப் போனார்..நான் என்ன அப்படிப் பெரிதாக...


உலகம் பெரிது .. காலம் வலியது.. சிறியோன் நான்..இன்னும் எத்தனையோ வாழ வேண்டும்...
கடல் தாண்டி, கடலைக் காட்டிலும் பேரன்பு சூழ்ந்த இருப்பினையே எனக்கு வழித்திருக்கிறீர்கள் உங்களில் யாவரும்.. கடவுள் என்றுமே எனக்காகப் பிரார்த்திப்பார்..!


முழுநாள் நிர்வாணமாய் யொதுங்கிய அறைக் கதவினை டம் டம்மெனத் தட்டுகிறார்கள்.. விமானம் தாள தாளப் பறக்கும்... நான் ஓங்கி ஓங்கி விரிவேன்..


அன்பின் இனியது
அன்பன்றி வேறேதும் உண்டோ.!


ஹாய் அம்மா
ஹாய் அப்பா
ஹாய் தங்கச்சி
ஹாய்டா டேய் உங்க ஆளு சௌக்கியமா ? லெட்டர் கொடுத்துட்டியா.. இல்ல இன்னும் அதே...??


( அவனது 2010 டைரிக் குறிப்பிலிருந்து.. )



6 comments:

ஹேமா said...

ஒவ்வொரு எழுத்துமே உணர்வாய் நட்பைச் சுமக்கிறது !

பா.ராஜாராம் said...

இனம் புரியாத வலி ஏற்படுத்தும் பகிர்வு...பிரிவு அறிவித்தல் என்பது- விடை பெறல் என்பதையும் விட வலிமையான, வார்த்தை. இந்த முக்கு போய், அந்த முக்கு திரும்பினால் உலகம்! எங்கே போய் விடப் போகிறது எல்லாம் மாப்ளை?

என் ஆனா ரூனா மாப்பிள்ளை... எங்களையும் இடுக்கிக் கொண்டு நடங்கள்..

(முதல் புகைப் படத்தில் நடுவில் அமர்ந்திருப்பவன் செம்ம தொங்கு தொங்குறான்) :-)

சிநேகிதன் அக்பர் said...

பிரிவதில் தான் விரிவு. உங்கள் எல்லையை விரித்துக்கொண்டே செல்லுங்கள். இன்னும் பல நட்புகளை தேடி. பயணத்தில் பதியப்படும் முகங்க‌ள் ஒவ்வொன்றும் எப்போதும் மறக்கப்படுவ‌தில்லை என்றோ ஒரு நாள் கண் முன் வந்து நிற்கும் என்ற நம்பிக்கையில்...

பிரியாவிடையளிக்கிறோம். மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்...

======

இந்த உரைநடையை படித்தவுடன் இப்படித்தான் எழுத வருது. போங்க பாஸ். போய் கல்யாணம் பண்ணி புள்ளை குட்டிகளை நல்லா படிக்க வையுங்க.

என்ன ஃபீலிங்க்...

ஊருக்கு போய் ஒரு மிஸ்கால் குடுத்தா பேசப்போறோம் அதுக்கு போய்...

( கொள்கையை மீறி உரைநடை எழுதி போட்டோ போட்டதை மறக்கமுடியாது ஆறுமுகம் )

bye.

take care.

நேசமித்ரன் said...

அன்பின் ஆ. மு

தகனம் கூட நம்மை முழுதாய் பிரித்து விட முடியாது இந்தப் பிரபஞ்சத்தில் இருந்து .சுவாசித்த காற்றின் எச்சத்தில் உயிர்வளர்க்கும் மரத்திலும் மீதமிருக்கும் நம் சுவாசம். 3000 வருடத்தின் முன் புதைந்த விலங்கு - மரத்தின் ஊன் எரிந்து கொண்டிருக்கிறது நம் யாரோவின் அடுப்பில் .சிகரட் லைட்டரில் ....


ஒரு மரணம் அவர்களால் அதிகம் பயனுற்ற பிரியமுற்ற உயிரைத்தான் அதிகம் பாதிக்கும் என்பதால் அவர்களால் எரிக்கப் படவேண்டும் என்பதால்தான் மகனை கணவனை தீயிடச் சொல்லுகிறார்கள். ஆனால் மெய்யாகவே எரித்துவிட்டுதான் வருகிறோமா ?

தூரங்கள் எட்டித்தொடும் அளவுதான் ... ஆனால் தேவைகள் மாறியபடியும் காலம் மாற்றியபடியும் இருக்கும் .

விரல் சொடுக்கில் பேசுகிற யுகத்தில் இருக்கிறோம் நாம்

மறதியின் வசீகரம் பிறப்பித்து கொண்டே இருக்கிறது நாளை, உலகை, மனசை, சிறகுகளை ...

சந்திப்போம் மக்கா :)

தூயவனின் அடிமை said...

எதார்த்தமாக திறந்தேன், உங்கள் மடல் மனதை கனமாக்கியது. என்ன சொல்வது என்றே
புரியவில்லை. விடுமுறையை சந்தோசத்தோடு கழித்து விட்டு வாருங்கள். மனதில் உள்ள மற்றதை விலக்கி வையுங்கள். உங்கள் விடுமறை இனிதே அமைய வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்பொம்.

எனது பதிவு said...

நண்பனே!
என் கண்கள் நிசப்தமாய் நீச்சலடிகுது

உன் பிரிவால் வாடுகிறேன் உன் அறையில்..........