Wednesday, September 22, 2010
நிழலென வளரும் மரம்..!
சக்கரங்கள் சுழலும் தண்டவாளங்களில்
உருளும் இசையென
மனம் பிரள்கிறது,
நிரம்பிய குடம் உடைந்து
பூ உதிர்ந்த தருணம்..!
குளுக்கோஸ் குழல் வழி
தெம்பூட்டப்படுபவளின்
ஆழக்கண்கள் பூவை நனைக்க,
அவள் புருவங்களுக்கு மத்தியில்
உதடுகள் உப்பி நீர் பதிக்கிறான்
பூ செய்தவன்..!
புதுப் புன்னகை ஒளி
வெளியெங்கும்
நிழலென வளரும் மரமாய் !
அழுது அழும் பூவுக்குத்
தேவதைகள் கதைசொல்லத்
தழும்பும் சமயம்,
நான் கொண்டுசென்ற பழக்கூடை
சிறு சிறு வர்ண நட்சத்திரங்களை
சிறகசைத்து தருவதாகவும்
அவற்றைப் பத்திரப்படுத்தி வைக்குமாறும்
அக்குழந்தைப்பூவே சைகை செய்கிறது
பிரசவஅறை ததும்ப..!
நன்றி உயிரோசை..
Tuesday, September 14, 2010
மிகநெருங்கிய மரணத்தின் கசடு..
யாருமற்ற குழந்தைக்கு ஒத்தடமாய்
இந்த நகரம்
என்னைத் தெருக்களில் நடத்திக் கொண்டிருக்கிறது..
இந்தப் போதைக்கு
எனக்கே என்னைப் பிடிக்காதிருக்கையில்
யாருக்கு என்னைப் பிடித்துவிடப் போகிறதென
வினவுவதாகவுமில்லை.
தொலைபேசியில் வந்த செய்தியை
நெடுநேரமாய் உமிழ்ந்தவாறே..
அது மட்டும் உறுதி,
பதில் அனுப்பப் போவதில்லை
இம்முறை என்னை நான்
தோற்றுவிடப் போகிறேன்.
இருப்பதைவிட
இல்லாது இருப்பது
என்னை மிகசௌகர்யமாக இருப்பதாக
உணரும் தருணம் இது.
இப்பொழுதெல்லாம்,
கண்கூசும் பகலில்
பத்துக்குப் பத்து அறையைவிட்டு
வெளியெங்கும் நான் நடமாடுவதில்லை..
இரவுமட்டுமே பிடித்துப் போய்விட்டதோ யென்னவோ,
நெடுநாட்களாய் வானம்
பசியூட்டியவாறே குழந்தையைத்
தொடர்கிறது.!
எனது தொலைபேசியில்
நான் வாசிக்காத செய்திகள்
குவிந்து கிடக்கிறது.
நன்றி உயிரோசை..
Thursday, September 2, 2010
எரியும் மெழுகில் நனையும் இரவு..
சிற்சில ஞாபகங்கள்
என்றுமே அழியாதிருப்பின் அடையாளமாய்
பழையதை யொத்த கடிதங்கள்
இன்னும் சிற்சில..
இன்றும்..!
ஒரு மழைநாளில் தான்
உருகி வழிந்தது இரவு
நமக்கான மெழுகில்..!
அம்மெழுகின் கதகதப்பு,
என் வாழ்வின் கதவடைபட்ட பின்பும்..
தீராக் காற்றின்
எல்லாச் சுவர்களிலும்
மோதிக்கொண்டுதான் வாழ்கிறது..
ஒரு முடிந்த உரையாடலின்
எல்லாச் சொற்களிலும்
நீயே காதலி..
முடிவில்லா எழுத்துக்களின்
எல்லாக் கடிதங்களிலும்
நானே காதலன்..
மெழுகு உருகட்டும்..
இரவு நனையட்டும்..!
நன்றி உயிரோசை..
Subscribe to:
Posts (Atom)